×

புதிய ரயில் தூக்குப்பால பணிகளுக்காக பாம்பன் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல 2 மாதம் தடை: அடுத்தாண்டு ஜனவரியில் வெள்ளோட்டம்?

ராமேஸ்வரம்: புதிய தூக்குப்பாலம் பொருத்தும் பணிகளுக்காக நேற்று முதல் பாம்பன் பழைய ரயில் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல 2 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து அடுத்தாண்டு ஜனவரி மாதம் ரயில் வெள்ளோட்டம் விடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் 2.07 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாலம் 101 தூண்களின் மேல், 99 இரும்பு கர்டர்கள் மீது இரு வழித்தடத்திற்கான தண்டவாளங்களுடன் அமைய உள்ளது.

பாலத்தின் மையப்பகுதியில் 72 மீட்டர் நீளத்தில் கப்பல் செல்வதற்காக செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கப்படுகிறது. மின்சாரம் மற்றும் ஹைட்ராலிக் சிஸ்டம் முறையில் அமைக்கப்படும் செங்குத்து தூக்குப்பாலத்தில், நடுவில் அமையும் தண்டவாளம் பகுதியை தூக்குவதற்காக இரண்டு பக்கமும் 35 மீட்டர் உயரத்தில் செங்குத்து தூண்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தூக்குப்பாலத்தின் மையப்பகுதியை உருவாக்கும் பணி முடிந்த நிலையில், இதனை ரயில் பாலத்துடன் இணைக்கும் பணிகள் துவங்க உள்ளது.

இதற்காக பாம்பன் கால்வாய் பகுதியில் கப்பல்கள், படகுகள் செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து பாம்பன் துறைமுக நிர்வாகம், நேற்று முதல் பணிகள் முடியும் வரை சுமார் இரண்டு மாத காலத்திற்கு பழைய ரயில் பாலம் வழியாக கப்பல்கள் கடந்து செல்ல தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பழைய ரயில் பாலத்தில் ஷெர்ஜர் தூக்குப்பாலம் இரண்டு மாதங்களுக்கு திறக்கப்படாது என்பதால் கப்பல்கள், படகுகள் பாம்பன் கடலில் ஒரு திசையில் இருந்து மற்றொரு திசைக்கு பாலத்தை கடந்து செல்ல முடியாது.

இடைப்பட்ட காலத்தில் 600 டன் எடையிலான செங்குத்து தூக்குப்பாலம் பொருத்தும் பணிகள் நடைபெறும். தற்போது புதிய இரட்டை வழித்தட ரயில் பாலத்தில் 92 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. செங்குத்து தூக்குப்பாலம் பொருத்தும் பணிகள் முடிந்ததும், புதிய பாலத்தில் ரயில்களை இயக்கி வெள்ளோட்டம் பார்த்து 2024 ஜனவரி மாதத்தில் புதிய ரயில் பாலம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post புதிய ரயில் தூக்குப்பால பணிகளுக்காக பாம்பன் பாலத்தை கப்பல்கள் கடந்து செல்ல 2 மாதம் தடை: அடுத்தாண்டு ஜனவரியில் வெள்ளோட்டம்? appeared first on Dinakaran.

Tags : Pampan ,Rameswaram ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் அருகே குந்து கால் கடலில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்!